கிருஷ்ணகிரி – டிசம்பர் 26 :
கிருஷ்ணகிரி நகர தலைமையகத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 33 வார்டு நிர்வாகிகளுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் அறிவுறுத்தலின்படி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் G. சுரேஷ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், கிருஷ்ணகிரி நகர செயலாளர் சசி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற SIR – சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில், தமிழ்நாடு முழுவதும் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 1,74,549 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 25,461 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவரங்களை மீண்டும் முழுமையாக சரிபார்க்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், நகராட்சியில் புதிய வார்டு நிர்வாகிகள் நியமனம், கூடுதலாக அமைக்கப்பட்ட பூத்துகளுக்கு புதிய பூத் நிர்வாகிகள் நியமிப்பது, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான தொடர் ஆலோசனைகள், தமிழக வெற்றி கழகத்தில் புதிய உறுப்பினர்களை இணைப்பது, அதேபோல் மாற்று கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை கழகத்தில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
வருங்கால அரசியல் செயல்பாடுகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவது முக்கியம் எனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


No comments:
Post a Comment